Thursday, October 26, 2006

சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-1


சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றை தவறு என்றும் பாவம் என்றும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எந்த அளவு சரி? உண்மையிலே சிலை வழிபாடு அல்லது விக்கிரக வழிபாடு என்பது ஒரு பாவமான காரியமா? அது இழிவானதா? சில மாற்றுமத சகோதரர்கள் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு முடிவே இல்லாத நரக தண்டனையை கடவுள் அளிப்பார் என்று கூட பிரச்சாரம் செய்கின்றனர். இது சரியா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

சிலை வழிபாடு அல்லது பொதுவாக உருவ வழிபாடு எனக் கூறப்படுவதுதான் என்ன?




காலம் காலமாக தன்னலமற்ற ஞானிகளால் தியானம் யோகம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்ட தெய்வத் திருவடிவங்கள் மீது தியானிப்பது மற்றும் பூசனைகள் செய்வது, மனதால் அன்பு செலுத்துவது ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சியே சிலை வழிபாடு ஆகும். ஒவ்வொரு மனிதனும் -ஆணும் பெண்ணும்- அழிவற்ற சத்தியத்தை தன்னுள் உணர முடியும். இது நம் ஒவ்வொருவருடைய பறிக்கமுடியாத உரிமையாகும் என்பது நம் பாரத ஞான மரபு மனிதகுலத்துக்கு அளிக்கும் செய்தியாகும்.




இந்த உருவ வழிபாடு அல்லது சிலை வழிபாடு என்பது ஆழ்ந்த உளவியல் தன்மையை கொண்டது.


நமது பிரக்ஞை என்பது பல தளங்களைக் கொண்டதாகும். அதைப் போலவே நமது அறிதலும் பல நிலைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் அறிதல் என்பது மற்றொரு தளத்தில் அல்லது அறிதல் நிலையில் வேறுபட்டு தெரியும். நாம் அனைவருமே பல தளங்களில் பல அறிதல் நிலைகளில் வாழ்கிறோம். ஒருவரே கூட ஒரே தளத்தில் ஒரே நிலையில் நிலையாக இருந்திடமுடியாது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடாத மிகச்சிறந்த தர்க்க வாதிகூட தன் குழந்தையைக் கொஞ்சுகையில் உணர்ச்சி மயமாக மாறலாம். ஆன்மிக தேடுதல் இந்த பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரத ஞான மரபின் சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு மானுடகுலத்தின் பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


இந்த உலகில் வாழும் பெரும் ஆன்மிக மரபுகளில், முக்கிய இறை மார்க்கங்களில், மானுட அறிதலின் பன்மையை ஏற்பவை பாரத தேசத்தின் திருமறைகளே ஆகும்.


எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவரது இயல்பிற்கும் அன்பிற்கும் ஏற்றவாறான ஒரு வடிவத்தில் பிரபஞ்சத்தின் ஆதாரமான சத்தியத்தை தியானிக்கவும் வழிபடவும் உருவாக்கப்பட்ட வழிமுறையே உருவ வழிபாடாகும். உருவ வழிபாட்டின் மூலம் எல்லையற்ற பரம்பொருளில் ஆன்மா லயிக்க முடியும். ஆதி அந்தமற்று விளங்கும் பரம்பொருளை உணர்வுப்பூர்வமாக ஒரு வடிவத்தில் ஏற்று வணங்குவது என்பது அழிவற்ற நித்திய சத்தியத்தைத் தேடும் ன்ம சாதனையில் முதல் கட்டமாக மட்டுமின்றி முக்கிய கட்டமாகவும் விளங்குகிறது. பாரத சிலை வழிபாட்டின் மற்றொரு முக்கிய அம்சம். அக-பிரபஞ்சத்தையும் (micro-cosom) புற-பிரபஞ்சத்தையும் (macro-cosom) இணைத்திடும் ஆதார குறியீடுகளை மனிதகுலத்துக்கு நமது சிலை வழிபாடு அளித்துள்ளது.


அறிவியலும் உளவியலும் (psychology) ஆழமும் விரிவும் அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத மெய்யியலாளர்கள் மனிதகுலத்துக்கு அருட்கொடையென அளித்த ஆன்மீக திருவுருவங்கள் மென்மேலும் தம் ஞான வெளிப்பாட்டில் விரிவடைந்துள்ள விதம் அறிவியலாளர்களையும் தத்துவஞானிகளையும் வியக்க வைத்துள்ளது.




இது குறித்து விரிவாக விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அவர்களது வார்த்தைகளிலேயே பின்னர் கேட்க உள்ளோம். அதற்கு முன்னால் பாரதத்தில் சிலை வழிபாட்டின் விக்கிர ஆராதனையின் தொன்மை குறித்து வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை காணலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home