இந்து தருமம் உண்மை மார்க்கம்

Monday, November 13, 2006

சிலை வழிபாடு தவறா? பாவமா? அல்லது அறிவியலா? -3

தெய்வ திரு உருவத்தின் ஆழ்ந்த குறியீட்டுத்தன்மை : விநாயக பெருமான் ஒரு எடுத்துக்காட்டு



இனி நமது பாரம்பரிய தெய்வத்த்திருவடிவங்கள் எத்தகைய ஆழமான ஆன்மிக தத்துவார்த்த சிறப்பும் செழுமையும் கொண்டவை என்பதனை ஒரு உதாரணத்தின் மூலம் காணலாம். ஆனை முகமும், தொந்தி வயிறும் கொண்ட பிள்ளையாரை எடுத்துக் கொள்வோம்.

பிள்ளையாரின் ஆனை முகம் பிரணவ வடிவமாக விளங்குகிறது. பிரணவம் எல்லையற்ற பரம்பொருளின் ஒலி வடிவம்.


பிள்ளையார் ஒரு கரத்தில் கோடாரி சார்ந்த அங்குசத்தை ஏந்தி இருக்கிறார். ஆனையை அடக்கும் அங்குசத்தினால் மதயானை போல் நம் உள்ளத்தில் எழும் தீய எண்ணங்களை அகற்றுகிறார். கோடாரியால் நம் அன்றாட வாழ்விலும் ஆன்மிக சாதனையிலும் முன்னேற்றத்திற்கு ஏற்படும் தளைகளைக் களைகிறார்.

மற்றொரு திருக்கரத்தில் விநாயகர் ஏந்தியிருக்கும் கயிறு பரம்பொருள் நம்மை நம் வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்த சத்தியத்தினை நோக்கி, (சில நேரங்களில் நாம் தயங்கி நிற்கும் போதும் கூட), அழைத்துச் செல்வதைக் காட்டுகிறது.

தொந்தி கணபதி என குழந்தைகள் அவரை அன்புடன் அழைக்கின்றனர்.


வேத முடிவில் நடம் நவிலும் விமலன்


அவரது தொந்தி அண்ட சராசரங்களும் பரம்பொருளுக்குள் அடக்கம் என்பதனைக் காட்டுகிறது. பரம்பொருளின் பிராண இயக்கத்தில் சுருங்கி விரியும் தொந்தி விரிவடைந்து சுருங்கி பின் மீண்டும் விரிவடைந்து பின் மீண்டும் சுருங்கும் பிரபஞ்ச இயக்கத்தினைக் காட்டுகிறது. ஜடப் பிரபஞ்சத்தின் அனைத்து பொருளும் இயக்கமும் இறை சக்தியின் ஒரு பகுதியே எனக்கூறும் பாரத மெய்ஞான தரிசனத்தை இது உணர்த்துகிறது.


ஆனை வடிவம் கொண்ட விநாயகரின் வாகனமாக இத்தனை சிறிய பெருச்சாளியா? அவ்வை பாட்டி எழுதிய விநாயகர் அகவலுக்கு உரை விளக்கம் எழுதிய அறிஞர் திரு.இரசபதி கூறுகிறார்:

"வழிபாட்டு வளர்ச்சிக்கு தக்க அளவாக,ஆன்ம இதயத்தில் அருள் விளக்கம் பிறக்கும். அந்நிலையை சத்தி நிபாதம் என்பர். சத்திநிபாதம் படரும் சமயம் சாதகருக்கு குண்டலினிக் கனல் குடுகுடு குறுகுறு என்று மேலேறிப் பாயும். பெருச்சாளி ஓட்டம் போல் அதிருகின்றது அவ்வொலி. மூலாதாரத்தில் ஓடிப்பாயும் குண்டலினிக் கனலேறி அமர்ந்துள்ளார் பிள்ளையார் என்பது பிண்ட நுட்பம்."


இவ்வாறு ஒவ்வொரு வடிவமைப்பும் ஆழமான நுட்பமான ஆன்மீக உண்மைகளினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள இந்த விநாயகரின் உண்மைத்தன்மைதான் என்ன? ஜான்.ஏ.க்ரிமஸ் எனும் தத்துவவியலாளர் 'Ganapathi: Song of the self' என ஒரு நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் அவர் கூறுகிறார்,

"விக்னேஸ்வரராக விளங்கும் இந்த கணபதி எனும் கணேசர் யார்? ஒரே வார்த்தையில் சொல்வதானால் கணேசர் என்றால் மெய்யுணர்வு. மெய்யுணர்வு என்பது சாஸ்வதமான அழியாத உள்ளுறையும் சத்தியத்தை இங்கே இப்போது உணர்வதற்கு தடையாக விளங்கும் விக்னங்களை அகற்றுவது என்பதாகும்."



அனந்த குணப் பரப்பும் உதிக்கும் பந்தமறுக்கும் திருவதனன் விநாயகப்பெருமான். நம்முள் விளங்கும் அக ஒளி. அவருக்கு நாம் படைக்கும் மோதகம் நம் உள்ளிருக்கும் நம் சுயத்தின் இனிப்பு இயற்கையை விளக்கும். அப்பெருமானின் வடிவின் முன் உடைக்கும் தேங்காயில் அகங்கார ஓடுடைய வெளியாகும் அமுத நீர் நாம் அடைய வேண்டிய நிலையை நமக்குணர்த்தும். பாச அறிவும் பசு அறிவும் பற்றுதற்கு அரிய சுத்த சைதன்ய அறிவு வடிவானவன் விநாயகன். விநாயகத் திருவடிவத்தினைப் போலவே பாரதத்தின் எண்ணற்ற தெய்வத் திருவுருவச்சிலைகளும் ஆழ்ந்த உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.


அடுத்த பதிவில் மேலும் நம் பாரம்பரிய திருவடிவங்களின் ஆழ் பொருளை ஆழ்ந்து நோக்கலாம்.
அதற்கிடையில் நம் தேசத்தின் நலிவுற்ற ஒடுக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு பாரத பாரம்பரியம் சார்ந்து சேவையாற்றிடுவது குறித்த சில பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்

Thursday, November 09, 2006

சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-2 உருவ வழிபாட்டின் தொன்மை

பாரதப் பண்பாட்டை போலவே பாரதத்தின் ஞான வெளிப்பாடான தெய்வத்திருவுருவச் சிலைகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை.


5000 வருடங்களுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில் சிலை வழிபாடு மிக உயர்ந்த முறையில் சிறந்திருந்ததைக் காண முடிகிறது. அகழ்வாராய்ச்சியாளர் B.B.லால் இது குறித்து கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத ஜீவ நதியாக சரஸ்வதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல நம் ஒவ்வொரு பண்பாட்டு இயக்கத்திலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் ஆன்மிக பாரம்பரியம் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.



இந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர்.பிஷ்ட் ரிக்வேத பண்பாட்டின் நிதர்சன வடிவமாக virtual reality ஆக சிந்து சமவெளி நாகரிக அமைப்புகள் திகழ்வதாகக் குறிப்பிடுகிறார். சில மாற்றுமத சகோதரர்கள் வேதங்கள் சிலை வழிபாட்டினை மறுப்பதாக தவறாகக் கூறுகின்றனர். இது பிழையான வாதமாகும். வேதங்களை நவீன காலத்தில் ஆராய்ச்சி செய்த ஸ்ரீ அரவிந்தரும் சரி, பழமையான உரையாசிரியராகிய சாயனரும் சரி வேதங்கள் உருவ வழிபாட்டினை கண்டனம் செய்ததாகக் கூறவில்லை. மாறாக ஸ்ரீ அரவிந்தர் வேதம் ஆழ்ந்த ஆன்மிக-உளவியல் உண்மைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.


வேத பண்பாட்டின் வெளிப்பாடாக அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அறியப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சார்ந்த இந்த முத்திரையை பாருங்கள்.


கடலடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி மறைந்த இதிகாச நகரங்களான பூம்புகாரையும் துவாரகையையும் கண்டுபிடித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் (marine archeologist) டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் இம்முத்திரையின் மேலே காணப்படும் காட்சி வேத கால அக்னி வழிபாட்டினை காட்டும் உருவ இலச்சினை என கூறுகிறார்.


இம்முத்திரையின் கீழே காணப்படும் ஏழு பெண்கள் வேதத்தில் கூறப்படும் ஏழு தெய்வீக சகோதரிகளாக நதிகளைக் கூறுவதினை நினைவுப்படுத்துகின்றனர். இன்றைக்கும் நீர்நிலைகளின் அருகில் சப்த மாதர் வழிபாடு உள்ளது.



தெய்வீக சக்தியின் வெளிப்பாடாக வேதம் இந்திரனைப் போற்றுகிறது. வேதத்தில் இந்திரன் காளையாக உருவகிக்கப்பட்டுள்ளார்.


புகழ்பெற்ற மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு விலங்கு இலச்சினைகளை வேதத்தின் சோமபானச் சடங்குகளின் குறியீடாகக் காண்கிறார்.


இவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கையில் வேத காலத்தில் உருவ வழிபாடு கிடையாது எனக்கூறுவது சரியல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேதம் வழிபாட்டுமுறையில் எவ்வித தடையையும் ஏற்படுத்தவில்லை.

'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்'
என ரிக்வேதம் கூறுகிறது. எனவே உருவ வழிபாடு வேத காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மிக முறையாக ஏற்கப்பட்டும் விளங்கியது.

Labels: , , , ,

Thursday, October 26, 2006

சிலை வழிபாடு தவறா? பாவமா அல்லது அறிவியலா?-1


சிலை வழிபாடு மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றை தவறு என்றும் பாவம் என்றும் பலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எந்த அளவு சரி? உண்மையிலே சிலை வழிபாடு அல்லது விக்கிரக வழிபாடு என்பது ஒரு பாவமான காரியமா? அது இழிவானதா? சில மாற்றுமத சகோதரர்கள் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு முடிவே இல்லாத நரக தண்டனையை கடவுள் அளிப்பார் என்று கூட பிரச்சாரம் செய்கின்றனர். இது சரியா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகளைத்தான் நாம் இந்த பதிவில் காண இருக்கின்றோம்.

சிலை வழிபாடு அல்லது பொதுவாக உருவ வழிபாடு எனக் கூறப்படுவதுதான் என்ன?




காலம் காலமாக தன்னலமற்ற ஞானிகளால் தியானம் யோகம் ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்ட தெய்வத் திருவடிவங்கள் மீது தியானிப்பது மற்றும் பூசனைகள் செய்வது, மனதால் அன்பு செலுத்துவது ஆகியவற்றின் மூலம் சத்தியத்தை அடைய மேற்கொள்ளும் முயற்சியே சிலை வழிபாடு ஆகும். ஒவ்வொரு மனிதனும் -ஆணும் பெண்ணும்- அழிவற்ற சத்தியத்தை தன்னுள் உணர முடியும். இது நம் ஒவ்வொருவருடைய பறிக்கமுடியாத உரிமையாகும் என்பது நம் பாரத ஞான மரபு மனிதகுலத்துக்கு அளிக்கும் செய்தியாகும்.




இந்த உருவ வழிபாடு அல்லது சிலை வழிபாடு என்பது ஆழ்ந்த உளவியல் தன்மையை கொண்டது.


நமது பிரக்ஞை என்பது பல தளங்களைக் கொண்டதாகும். அதைப் போலவே நமது அறிதலும் பல நிலைகளைக் கொண்டதாகும். ஒவ்வொரு தளத்திலும் ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் அறிதல் என்பது மற்றொரு தளத்தில் அல்லது அறிதல் நிலையில் வேறுபட்டு தெரியும். நாம் அனைவருமே பல தளங்களில் பல அறிதல் நிலைகளில் வாழ்கிறோம். ஒருவரே கூட ஒரே தளத்தில் ஒரே நிலையில் நிலையாக இருந்திடமுடியாது. உணர்ச்சிகளுக்கு இடம் கொடாத மிகச்சிறந்த தர்க்க வாதிகூட தன் குழந்தையைக் கொஞ்சுகையில் உணர்ச்சி மயமாக மாறலாம். ஆன்மிக தேடுதல் இந்த பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பாரத ஞான மரபின் சிலை வழிபாடு அல்லது உருவ வழிபாடு மானுடகுலத்தின் பன்மைத்தன்மையை கணக்கில் எடுத்துக்கொள்கிறது.


இந்த உலகில் வாழும் பெரும் ஆன்மிக மரபுகளில், முக்கிய இறை மார்க்கங்களில், மானுட அறிதலின் பன்மையை ஏற்பவை பாரத தேசத்தின் திருமறைகளே ஆகும்.


எனவே ஒவ்வொரு மனிதருக்கும் அவரது இயல்பிற்கும் அன்பிற்கும் ஏற்றவாறான ஒரு வடிவத்தில் பிரபஞ்சத்தின் ஆதாரமான சத்தியத்தை தியானிக்கவும் வழிபடவும் உருவாக்கப்பட்ட வழிமுறையே உருவ வழிபாடாகும். உருவ வழிபாட்டின் மூலம் எல்லையற்ற பரம்பொருளில் ஆன்மா லயிக்க முடியும். ஆதி அந்தமற்று விளங்கும் பரம்பொருளை உணர்வுப்பூர்வமாக ஒரு வடிவத்தில் ஏற்று வணங்குவது என்பது அழிவற்ற நித்திய சத்தியத்தைத் தேடும் ன்ம சாதனையில் முதல் கட்டமாக மட்டுமின்றி முக்கிய கட்டமாகவும் விளங்குகிறது. பாரத சிலை வழிபாட்டின் மற்றொரு முக்கிய அம்சம். அக-பிரபஞ்சத்தையும் (micro-cosom) புற-பிரபஞ்சத்தையும் (macro-cosom) இணைத்திடும் ஆதார குறியீடுகளை மனிதகுலத்துக்கு நமது சிலை வழிபாடு அளித்துள்ளது.


அறிவியலும் உளவியலும் (psychology) ஆழமும் விரிவும் அடையும் இன்றைய காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத மெய்யியலாளர்கள் மனிதகுலத்துக்கு அருட்கொடையென அளித்த ஆன்மீக திருவுருவங்கள் மென்மேலும் தம் ஞான வெளிப்பாட்டில் விரிவடைந்துள்ள விதம் அறிவியலாளர்களையும் தத்துவஞானிகளையும் வியக்க வைத்துள்ளது.




இது குறித்து விரிவாக விஞ்ஞானிகள் என்ன கூறுகிறார்கள் என்பதனை அவர்களது வார்த்தைகளிலேயே பின்னர் கேட்க உள்ளோம். அதற்கு முன்னால் பாரதத்தில் சிலை வழிபாட்டின் விக்கிர ஆராதனையின் தொன்மை குறித்து வரலாற்றாசிரியர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ள கருத்துக்களை காணலாம்.

Tuesday, October 24, 2006

பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்.





பிள்ளையார் நம் பாரதம் முழுவதும் வணங்கப்படும் சாமி.

தொல்காப்பியத்திலும் புறநானூறிலும் கூட பிள்ளையார் குறித்து குறிப்புகள் உள்ளதென அறிஞர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தில் செந்தூரம் பூசப்பட்ட ஆனைத்தலை வடிவங்கள் கிடைத்துள்ளன.



எந்த நல்ல காரியம் செய்வதானாலும் பிள்ளையாரை வணங்கி தொடங்குவது தமிழர் மரபு ஆகும். இன்று அது பாரதம் முழுவதும் ஏற்கப்பட்டுள்ள மரபாகியுள்ளது. தமிழ் குழந்தைகள் அனைவருக்குமே அன்பு பாட்டி முதுபெரும் மூதாட்டி ஔவையார். அந்த அமுதின் இனிய சொற்களை நமக்கு வழங்கிய பாட்டி வணங்கிய தெய்வம் பிள்ளையார்.

இவரது தெய்வத் திருவடிவம் பல சத்திய தத்துவங்களை காட்டுவதாக அமைகிறது. இது குறித்து சிலை வழிபாடு குறித்த பதிவில் பின்னர் விளக்கமாக பார்க்கப்போகிறோம். முந்தி முந்தி விநாயகர் தொந்தி கணபதி தும்பிக்கை நாதர் தாள் வணங்கி இந்த எளிய பணியை தொடங்குகிறேன்.

இந்து தருமம் : உண்மையான உலகப் பொது அறம்


கடந்த ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பரத கண்டத்தில் மகத்தான நெறியாக விளங்கிவருவது இந்து தருமம் ஆகும். பற்பல சோதனைகள் பற்பல படையெடுப்புகள் ஆகியவற்றிற்கு மேலாக சத்தியத்தை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து அளித்து வரும் தருமம் இந்து தருமமே ஆகும். நூற்றுக்கணக்கான மொழிகளில் இலக்கிய வளத்தினை செழுமைப்படுத்தியுள்ள தருமம் இந்து தருமமே ஆகும். பல இன மக்களை இன உணர்வுகளுக்கு அப்பால் ஒருங்கிணைத்த தருமம் இந்து தருமமே ஆகும். உலகத்தின் அனைத்து மத சம்பிரதாயங்களையும் தன்னுள் ஏற்கும் அன்னைத்தன்மை கொண்ட தருமம் இந்து தருமமே ஆகும்.

ஆனால் துரதிட்டவசமாக காலனிய ஆதிக்கத்தாலும் அன்னிய படையெடுப்பாலும் சமுதாய தேக்க நிலையினாலும் ஏற்பட்டுள்ள பல சமுதாய தீமைகளுக்கு இந்து தருமமே காரணம் என்று சில நிலை தடுமாறிய சகோதரர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் பாரதத்தின் சமுதாய தீமைகளும் அவலங்களூம் வாழையடி வாழையாக வந்த இந்து தரும அருளாளர்கள் தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய போதித்த வேத சத்தியங்களை இந்தியர்களாகிய நாம் மறந்ததாலேயே ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வலைப்பதிவு நம் நாட்டின் சத்திய வேத நெறியான இந்து தருமம் தனிமனித-குடும்ப-சமுதாய-தேசிய தளங்களில் நமக்கு அளித்துள்ள கடமைகளையும் நெறிமுறைகளையும் விளக்கிட முயலும் எளிய முயற்சியாகும். இந்து தருமம் என்பது பௌதீக பிரபஞ்சத்தினைக் காட்டிலும் விரிவும் ஆழமும் உடையது. அதனை என்னைப் போன்ற எளிய பாமரன் விளக்கிட முயல்வது என்பது நரி வாலால் கடலாழம் பார்த்த கதைதான்.


ஆனால் உலகிற்கே ஒளியாக விளங்கும் இந்து தருமத்திற்கு நாயேன் அளிக்கும் ஒரு வணக்கமே இது. இந்த தருமத்தினை நானும் என் சந்ததிகளும் பின்பற்றிட இந்து சமுதாயம் செய்திட்ட பெரும் தியாகங்கள், இந்து தருமத்தின் சத்தியத்தினை தம் வாழ்க்கையில் உணர்ந்திட்ட பெரும் மகான்கள் ஆகியவர்களின் நினைவுக்கு அடியேன் அளித்திடும் ஒரு சிறு சமர்ப்பணம் இந்த வலைப்பதிவு.


ஆதி ஆதி காலம் தொட்டு வந்த தருமம். ஆதி மூல சத்தியத்தை கண்ட தருமம். ஓதி ஓதி வேதங்களை உரைத்த தருமம். நீதி தேவன் கோவில் கொண்டு நிலைத்த தருமம். அதுதான்
இந்து தருமம். முற்றும் உணர்ந்த இந்து தரும முறை அறியாமல் தவறு கூறும் அறியா மனங்களை அன்பால் திருந்த செய்குவோம்.